தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் என்பது தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலினை கதவுக் கோயில் என்று அழைக்கின்றனர். மூலவராக சிலைகளையோ, படங்களோ இல்லாமல் கதவினை மட்டுமே காமாட்சியம்மனாக வழிபடுகின்றனர். இக்கோயில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய கோயிலாகவும், சுற்றுலாதளமாகவும் உள்ளது.
Temple Name: Moogilanai Kamatchi Amman Temple
Temple Timings: 6.00 AM to 6.00 PM
Place: Devadanappatti, Near Periyakulam, Theni District, Tamilnadu, INDIA.
Geo Location: https://www.google.co.in/maps/place/10°10'11.0"N+77°38'57.9"E/@10.169717,77.6481382,513m
Bus Service: Regular town buses available from Periyakulam & Vathalakundu. Buses are also available from Madurai.
Train Service: Nearest Railway stations - Madurai 73 kms, Dindigul 54 kms
Nearest Airport: Madurai 73 kms
தல வரலாறு
இந்து சமயக் கதையின்படி, முன்பொரு காலத்தில், காஞ்சனா எனும் காட்டுப்பகுதியை, சூலபாணி எனும் அசுர மன்னன் வங்கிசபுரி எனும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். இவன் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றிருந்தான். அதில் தனக்குத் தன்னைக்காட்டிலும் அதிக வலிமையுடன், தான் பெற்ற அரிய சக்திகளுடன் ஆண் மகன் ஒருவன் பிறக்க வேண்டும் என்பதும் ஒன்று. இந்த தவத்தின் பலனால் அவனுக்கு வலிமையான ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு வச்சிரதந்தன் எனும் பெயரிட்டு வளர்த்து வந்தான். பின்னர் அவனை அப்பகுதியின் அரசனாக்கினான். அவனுக்கு மாங்குசானன் என்பவன் அமைச்சராகவும், துட்டபுத்தி என்பவன் தளபதியாகவும் இருந்தனர். இவர்களிருவரின் ஆலோசனைப்படி காட்டுப் பகுதியிலிருந்த தவசிரேஷ்டர்களையும், வேத விற்பன்னர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். பிறப்பிலேயே பல்வேறு சக்திகளைப் பெற்றிருந்ததால் அவனை யாராலும் எதிர்க்க முடியவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் அவனுடைய தொல்லைகள் பற்றி பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். அவரும் வச்சிரதந்தனை அழிக்க தேவேந்திரனை அனுப்பி வைத்தார். தேவேந்திரன் வச்சிரதந்தனின் தளபதியான துட்டபுத்தியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது படையையும் இழந்து போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டான். இப்படி ஓடிய தேவேந்திரன் வச்சிரதந்தனை பராசக்தியால்தான் அழிக்க முடியும் என்று கருதி பிற தேவர்களுடன் பராசக்தி காமாட்சியம்மனாக எழுந்தருளியுள்ள காஞ்சிபுரம் சென்று அன்னையிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற காமாட்சியம்மன் அவனை அழிக்கப் புறப்பட்டார். வங்கிசபுரி வரும் வழியில் பன்றிமலை என்ற வராகமலையில் இறங்கி துர்க்கையை வச்சிரதந்தனுடன் போரிட அனுப்பி வைத்தார்.
துர்க்கை அங்கிருந்து புறப்பட்டு வங்கிசபுரி வந்து வச்சிரதந்தனுடன் போர் புரிந்தார். அவனுடைய தலையைத் துண்டித்தார். மீண்டெழுந்து சிங்கத்தலையுடன் நின்றான். அதையும் துண்டித்தார். பின்னர் புலி, கரடி, காட்டெருமை என ஒவ்வொரு தலையுடன் தோன்ற அனைத்தையும் துண்டித்தார் துர்க்கை. இவனை ஒழிக்க காமாட்சியம்மனாலேயே முடியும் என்ற நோக்குடன் துர்க்கை அங்கிருந்து திரும்பினார்.
துர்க்கை தோல்வியுடன் திரும்பியது கண்டு காமாட்சியம்மன் கோபத்துடன் துர்க்காதேவியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வங்கிசபுரி வந்தார். வச்சிரதந்தன் ஏவிய ஆயுதங்கள் காமாட்சியம்மனை மூன்றுமுறை வலம் வந்து அவனிடமே திரும்பிச் சென்றது. வச்சிரதந்தனும் அந்த அம்மனை வணங்கினான். பின்னர் அம்மனுடன் போரிடத் தொடங்கினான். துர்க்கையுடன் போரிட்டது போல் பல்வேறு தலைகளுக்கு மாறினான். காமாட்சியம்மன் துர்க்கையிடம் வச்சிரதந்தன் தலை துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்தவுடன் அதைக் காலால் நசுக்கி அழித்து விடும்படி கூறி வச்சிரதந்தனின் தலையைத் துண்டித்தார். துர்க்கையும் அந்தத் தலையைக் காலால் நசுக்கி அழித்தார். அசுரன் மறுதலை எடுக்க முடியாமல் அழிந்தான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
அசுரனது தலையை மிதித்த இடம் தலையாறு எனவும், மூளை சிதறிப் போய் விழுந்த இடம் மூளையாறு எனவும், குலைகாய் ஈரல் விழுந்த இடம் குலையூத்து எனவும், உடல் குறுக்காக விழுந்த இடம் குறுக்குமலை எனவும் பெயர் பெற்றன. இன்றும் இந்தப் பகுதியில் இந்தப் பெயர்கள் வழக்கத்திலுள்ளன.
வங்கிசபுரிக்கு அருகில் வேகவதி என்ற ஆறு ஓடிக் கொண்டிருந்தது. இந்த ஆறு மாணிக்கமலைத் தொடரிலிருக்கும் தலையாறு எனுமிடத்தில் மூங்கில் காடுகளுக்கிடையே பாய்கிறது. அசுரனைக் கொன்ற அம்மன் யௌவன வடிவம் கொண்டு இந்நதி அருகில் தவமிருந்தாள். அசுரனைக் கொன்ற பாவம் அம்மனுக்கு நீங்குவதற்காக சப்த கன்னியர்கள், தெய்வப் பெண்கள், துர்க்கை அனைவரும் சேர்ந்து ஆயிரத்தெட்டு தங்கக் குடங்களில் நீரெடுத்து வாசனைத் திரவியங்களுடன் மஞ்சளும் கலந்து அபிசேகம் செய்தனர். கன்னித் தெய்வமாய் பொலிவுறும் காமாட்சியம்மனுக்கு அபிசேகம் செய்த மஞ்சள் நீர் ஆற்றில் கலந்ததால் வேகவதி ஆறாக இருந்த ஆறு மஞ்சளாறு எனப் பெயர் மாற்றமடைந்தது. அம்மன் தலையாற்றின் மூங்கில் காடுகளில் தவமிருந்த இடத்தில் சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இது “அம்மா மச்சு” என்று அழைக்கப்படுகிறது.
பெயர்க் காரணம்
அசுரன் ஆண்ட வங்கிசபுரிக்கு தலேச்சுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாக அளிக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி” என்று அழைக்கப்பெற்றது. பின்னர் இந்தப் பெயர் மருவி “தேவதானம்” என்று ஆனது. தற்போது இது தேவதானப்பட்டி என்று ஆகி விட்டது. இந்த தெய்வதானப்பதி நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் ராஜகம்பள நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பூசாரி நாயக்கர் என்பவரின் தலைமையிலான பாளையத்தின் ஆட்சியாக (ஜமீன்தார் ஆட்சி) இருந்து வந்தது. இந்த ஜமீனைச் சேர்ந்த மாடுகளை ஒருவன் மேய்க்கக் கொண்டு செல்வான். அவன் மேய்க்கக் கொண்டு செல்லும் மாடுகளில் ஒன்றான ஈனாத (குட்டி போடாத) பசு ஒன்று தினமும் அந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று மாலையில்தான் திரும்ப வரும். அந்த ஒரு பசு மட்டும் எங்கே செல்கிறது? எதற்குச் செல்கிறது? என்று அறிய ஆவல் கொண்ட அவன் ஒருநாள் அந்தப் பசுவைப் பின் தொடர்ந்து சென்றான்.
அங்கு மூங்கில் புதர் ஒன்றில் யௌவன வடிவமான தேவ அம்சம் பொருந்திய பெண் அப்பசுவின் பால் அருந்துவது கண்டான். அவன் கண்டது சாதாராணப் பெண் அல்ல. அது காமாட்சியம்மன். ஒளிப்பிழம்பாய் விளங்கும் அன்னையை மாடு மேய்ப்பவன் பார்த்தவுடன் அவன் கண்கள் குருடாகிப் போய்விட்டன. அவன் ஜமீன்தாரரிடம் சென்று நடந்ததைக் கூறினான். இது தெய்வக் குற்றமாக இருக்கும் என்று கருதிய ஜமீன்தாரர் பூசைகள் செய்தார். அப்போது அம்மன் அசரீரியாக, “இந்தப் பகுதியில் வச்சிரதந்தன் என்ற அசுரனை அழித்து அமைதிக்காக தவமிருக்கும் என்னைக் கண்ட மாடு மேய்ப்பவன் என்னுடைய ஒளி தாங்காமல் அவன் கண்களை இழந்தான். இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆற்றில் பெருமழை பெய்து வெள்ளம் வரும். அந்த வெள்ளத்தின் மீது மிதந்து வரும் மூங்கில் பெட்டியில் நான் அமர்ந்து வருவேன். ஒரு இடத்தில் மூங்கில் புதர் கொண்டு அணையிட்டு பெட்டியைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பெட்டியை எடுத்து வழிபட்டால் குருடான உன் மாடு மேய்ப்பவனுக்குக் கண்கள் தெரியும். கன்னித் தெய்வமான என்னருகில் இல்லறத்திலிருப்பவர்கள் குடியிருக்கக் கூடாது. நெய்விளக்கு தவிர வேறு விளக்குகளை ஏற்றக் கூடாது. தேங்காயும் பழமும் நைவேத்தியம் செய்தால் போதும். அன்ன நைவேத்தியம் கூடாது” என்றும் கூறியது.
அம்மனின் வாக்குப்படி மழை பெய்து ஆற்றில் வெள்ளம் வந்தது. ஜமீன்தாரரும், அந்த ஊர் மக்களும் மஞ்சளாற்றின் கரையில் காத்து இருந்தனர். ஆற்றில் மூங்கில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. பெட்டியைக் கண்டதும் அவர்கள் மூங்கில் புதர் அணையிட்டு அந்தப் பெட்டியை நிறுத்தினர். கண்கள் குருடான மாடு மேய்ப்பவன் அந்தப் பெட்டியை எடுத்தான். அவன் அந்தப் பெட்டியைத் தொட்டவுடன் அவனுக்கு கண்கள் தெரியத் தொடங்கின. காக்கும் தெய்வம் காமாட்சியம்மனின் சக்தியை நேரில் கண்ட மக்கள் பக்தியுடன் வணங்கத் தொடங்கினர். தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து அவசர அவசரமாகப் பூசை செய்தார்கள். தேங்காய் உடைக்காமல், வாழைப்பழம் உரிக்காமல் பூசை செய்த பின்னர்தான் உணர்ந்தார்கள். குட்டி போடாத காரம்பசுவின் பாலருந்திய அம்மன் உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் விரும்புகிறார் என்றும் தெளிவு கொண்டனர். அன்றிலிருந்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. பழம் உரிக்கப்படுவதில்லை. பூசை செய்த பின்னர்தான் தேங்காய் உடைக்கப்படும். இது வேறு எந்த இந்து சமயக் கோயில்களிலும் இல்லாத ஒன்று. இக்கோயிலில் அன்ன நைவேத்தியமும் செய்யப்படுவதில்லை.
கோயில் கதவிற்குப் பூசை
மூங்கில் அணையிட்டு நிறுத்தியதால் இந்த அம்மன் மூங்கிலணைக் காமாட்சி என்று அழைக்கப்படுகிறார். அம்மனின் அருள் வாக்குப்படி பெட்டி எடுத்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. காமாட்சிப்புல்லால் வேயப்பட்ட குச்சுவீட்டுக்குள் (குடில்) அம்மன் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கோயில் பூசை செய்யும் பொறுப்பு மலைமேல் குடியிருக்கும் மன்னாடியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் பூசைப் பணிகளைச் செய்து வந்தனர். இந்நிலையில் மன்னாடியருக்கும், ஜமீந்தாரருக்கும் அவர்களது நிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தக் கருத்து வேறுபாட்டில் கோபம் கொண்ட மன்னாடியார் கோயில் கதவைப் பூட்டியதுடன் “நான் அடைத்த கதவு என்றும் திறக்கக் கூடாது” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து இன்று வரை பூட்டியகதவு திறக்கப்படுவதில்லை. மேலும் அடைத்த கதவிற்கு முன்பாகத்தான் பூசை செய்யப்படுகிறது. தற்போது அந்த அடைத்த கதவின் முன்பாக நாக பீடம் அமைக்கப்பட்டு காமாட்சியம்மனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையிலிருந்தபடி கோயிலின் குச்சுவீடு கலசம் (கர்ப்பகிருக கலசம்) தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
காமக்காள் திவசம்
பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த கடைசி ஜமீந்தார் மனைவி காமக்காள் அன்பவர் தனது ஒரே மகனான பொம்முலிங்கசாமி என்ற மகனுடன் கோயிலுக்குள் இருக்கும் காமக்காள் அரண்மனை எனும் கட்டிடத்தில் வசித்து வந்தார். காமக்காள் தன் பக்தியின் வலிமையால் அம்மனுடன் நேரடியாகப் பேசும் பேறு பெற்றாள். இரவில் தன் தாயார் தனியாகச் சென்றி வருவதில் சந்தேகமடைந்த மகம் தாயைக் கோபித்துக் கொண்டார். அவண் அம்மா உண்மையைக் கூறிய நிலையிலும் நம்பாமல் தானும் அம்மனைக் காண வேண்டுமென்று பிடிவாதம் செய்தான். அன்றிரவு காமக்காள் மகனை அழைத்துக் கொண்டு சென்றார். காமாட்சியம்மனை நேரில் கண்ட அவன் மண்டை வெடித்துச் சிதறி இறந்தான்.
தன் ஒரே மகன் தலை வெடித்து இறந்ததைக் கண்ட காமக்காள் அம்மனிடம், “ எனக்கு இருந்த ஒரு மகனையும் எடுத்துக் கொண்டாயே. இனி நான் இறந்த பிறகு எனக்குச் செய்ய வேண்டிய திவசக் காரியங்களை (இறந்தவருக்குச் செய்யும் சில சடங்குகள்) யார் செய்வார்?” என வருந்திக் கேட்டள். உடனே அம்மன், “ வருத்தமடையாதே, நீ இறந்த பின் நாயக்கர் சமுதாயத்தவரைக் கொண்டே உனக்கு திவசமிடச் செய்கிறேன்” என்று வாக்களித்தாள். காமக்காள் தை மாதம் இரத சப்தமியில் மரணமடைந்தாள். அம்மனின் வாக்குப்படி ராஜகம்பளம் நாயக்கர்கள் திவசமிட்டனர். (காமக்காள் மற்றும் அவள் மகன் சமாதிகள் (கல்லறைகள்) இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன.
மகா சிவராத்திரி விழா
ஒவ்வொரு ஆண்டும் தை மாத இரத சப்தமியில் கோயிலில் காமக்காள் திவசம் கொடுக்கப்படுகிறது. திவசம் முடிந்த அன்றே கோயிலின் ஆண்டுத் திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. மகா சிவராத்திரியை முதல் தினமாகக் கொண்டு எட்டு நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழா தேனி மாவட்டத்திலுள்ள கோயில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இத்திருவிழாக் காலமான எட்டு நாட்களும் கோயிலுக்கு தனிப் பேருந்து வசதிகள் செய்யப்படுகின்றன.
ஆடிப்பள்ளயம் திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திங்களில் முதல் மூன்று நாட்கள் ஆடிப்பள்ளயத் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ராஜகம்பளம் நாயக்கர் சமுதாயத்தின் “தேவராட்டம்” நிகழ்வு சிறப்பாக இருக்கும். இது தவிர சித்திரை வருடப் பிறப்பு, விஜயதசமி, கார்த்திகைத் திருநாள், தைப்பொங்கல் போன்ற பிற விழாக்காலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பிற நாட்களில் இந்தக் கோயிலில் தினசரி பூசைகள் நடைபெற்று வருகின்றன.
பயண வசதி
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகிலுள்ள தேவதானப்பட்டி எனும் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கோயிலுக்குப் பேருந்தில் செல்ல விரும்புபவர்கள் திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்லும் வழித்தடத்தில் வத்தலக்குண்டுக்கு அடுத்து தேவதானப்பட்டி எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். இது போல் மதுரையிலிருந்து பெரியகுளம் செல்லும் வழித்தடத்தில் தேவதானப்பட்டியில் இறங்கிக் கொள்ளலாம். சென்னை, பெங்களூர் போன்ற ஊர்களிலிலிருந்து கம்பம், தேனி, குமுளி, போடிநாயக்கனூர், பெரியகுளம் செல்லும் பேருந்துகளில் பயணித்தால் தேவதானப்பட்டியில் இறங்கிக் கொள்ளலாம். தொடருந்தில் (இரயில்) பயணிப்பவர்கள் திண்டுக்கல் வந்து அதன் பிறகு மேலே குறிப்பிட்ட வழித்தடத்தில் தேவதானப்பட்டியை அடையலாம்.